புதன், 16 மார்ச், 2016

பஞ்ச பூதங்கள்

ஐம்பூதங்களின்  ஆற்றலை  அழகுறச்  சொல்லுவோம்
ஐம்புலன்களால்  அவற்றை  நம்முள்  உணருவோம்
ஐயம்  எமக்கில்லை எம் தெய்வம் அவையே
ஐக்கியப்பட்டு  நின்று அவற்றைப்  பேணுவோம்

ஆகாசம் :

அண்ட சராசரங்களையும்  நின்   ஆளுகைக்குட்படுத்தி
பிரம்மாண்டமாய்ப்  பரவிய பிரபஞ்சக்  களமே
விண்ணே, வெட்டவெளியே,ஆகாசமே
ஆதியாய்  அனாதியாய்  பரம்பொருளாய்ப்
பேரியக்க  மண்டலமாய்  எங்கும்  பரவிய  மெய்ப்பொருளே
எம்முள்ளும்  சூழ்ந்து நிற்கும் உனை   வணங்கி  காப்புப் பெறுவோம்

காற்று :
புவிக்கொரு  கவசமாய்  எமைச் சுற்றி  இயங்கும் காற்றுவெளியே
மெய்க்குள் சுவாசமாய் எமை இயக்கும்  உயிர்க்காற்றே
நாதத்துள்  நரம்பாய் பிராணிகளுள் நாடியாய் நன்மை செயும் நல்லவனே
அசைவுக்கு ஆதாரமாய்  ஓசைக்கு  உணர்வாய்
இசைக்கு  உயிர் கொடுத்து  இன்றெனைப்  பாடவைத்து
பலகோடி நலன் நல்கும்  வாயுதேவனே  வாழவைப்பாய்  எமை இன்று

நெருப்பு:
தீயே! தீயதைப்  பொசுக்குவதும்  தின்பதை சமைப்பதும் நீயே
உலகை இயக்கும் வெப்பமாய் ,உயிரினங்களை உலவச்செய்து
உடலினுள்ளே ஊடுருவி  உயிர் சக்திக்கு உரமளிப்பாய்
காலமெலாம்  கடமை ஆற்றும் கர்மயோகியே
உன்னுதவி இன்றி  உயிரினங்கள் குளிர்ந்து விட்டால் உய்வதேது?
கருத்துடன்  உன்னுயர்வு  உணர்ந்து  ஊக்கமும்  ஆக்கமும்  பெற்று வாழ்வோம்

நீர் :
உலக உருண்டையை சூழ்ந்துள்ள கடலே, நீரே
சிற்றாறாய் ,பொய்கையாய் , நீர்வீழ்ச்சியாய் ,மஹாநதியாய் ,
மாக்கடலாய்,நீராவியாய் ,மேகத்தினின்று மழையாய்
மண்ணுலகம் வந்தடைந்து  வையகத்தை  வாழவைக்கும்
வள்ளலே! உளம்குளிர  உனை  வாழ்த்துவோம்
வாழ்வில்  மேன்மையுற்று, மேம்படுத்துவோம்  உனையும்

நிலம் :

நீரினால் சூழப்பட்ட  நிலமடந்தை  மண்ணகமே
புவியே,பூமித்தாயே ,பொறுமையின் சிகரமே
அகழ்வாரையும் ,இகழ்வாரையும் தாங்கும் தரணியே !
ஐம்பூதங்களின்  பரிணாம எழுச்சிதனில்
ஐந்தாம் நிலையில் அமைந்த நிலமே
நின்னைப்  பாதுகாத்துப் போற்றிப் பயன் பெறுவோம்


நிலமடந்தையும் , நீரும், நெருப்பும், நானிலம் சூழ் காற்றும் ,
நீள்  விசும்பும்  நிச்சலும் நன்மை பயக்க
நாம் இவற்றின் ஆற்றலை  ஆக்க பூர்வமாக்குவோம்
இவை ஐந்தும்  நம்முள்ளே ஒன்றினுள் ஒன்றாய்  இயங்கும் திறன் உணர்வோம்
இவற்றோடு  இயைந்து  வாழ்வினை மேம்படுத்தி
இயற்கையின்  மேன்மையைப்  போற்றி வாழுவோம்