வியாழன், 16 ஜனவரி, 2020

மஹாபெரியவா


                                  1. அன்று இவ்வுலகம்  அளந்தான்  பெரியவன்

                                     இன்றிங்கு நம்மிடையே  ஒளிர்ந்தார்  பெரியவா

                                     சென்றங்கு இருந்துகொண்டு ஒளிக்காட்டி வழிகாட்டி
                 
                                     என்றென்றும் கருணையுடன் கைபிடித்துச் செல்லட்டும்


                                 2.  காலடிஆசானின் பாதையில் சென்று அவர்

                                      காலடிச் சுவடுகளை ஆதாரமாய்பற்றி

                                      மாலடியைப் பற்றிவிட்டால் குறையொன்றும் இலையென்று

                                      நாலடியில் நவின்று நமை நன்மைபெறச் செய்துவிட்டார்

 
                                  3. சங்கரனும் ஐங்கரனும் ஷண்முகனும் சேர்ந்து
 
                                     சங்கரனாய்  இங்கெமை  உய்விக்க வந்தனரோ

                                     திங்களும் ஆதித்யனும்  எழுந்தாற்போல் வந்து

                                      தங்கமாநகர் காஞ்சியில் சிங்கமாய் அமர்ந்தாரோ


                                 4. அன்று அந்த ஸ்வாமிநாதன் தகப்பனுக்கு குருவானார்

                                     இன்றிந்த ஸ்வாமிநாதன் உலகுக்கே குருவானார்

                                     பாலனாய் காஞ்சிவந்து துறவியாய்  அமர்ந்தாரே

                                     சீலனாய் நமையெல்லாம் வழிநடத்திச் செல்கிறாரே

புதன், 8 ஜனவரி, 2020

கிட்டிடுமோ வெட்டவெளி !?

1. ஆகாசம் என்றால்  வெட்டவெளி  என்கிறார்

    போகாத ஊருக்கு  வழி எங்கே என்றிடாமல்

    யோகாசனம் பயின்று  நிட்டையில் ஆழ்ந்துவிட்டால்

   நோகாமல்  மனம் சென்று  ஆகாயம்  தொடும் என்றார்


2. எட்டிஎட்டிப் பார்க்கிறேன் எட்டவில்லை அது எனக்கு

    கிட்டத்தில் அதுஇல்லை தொட்டுணர முடியவில்லை

    கிட்டமாட்டேன் என்று அது  அங்கேயே இருக்கிறது

    எட்டத்தில் இருந்துகொண்டு  எல்லையற்று விரிகிறது

                    
3. தொட்டிடுவேன் மனதால் ஆகாயத்தை என்று

    திட்டமிட்டு அமர்ந்து  தியானம் செய்ய முயல்கின்றேன்

    கட்டவிழ்ந்து ஓடும்  மனத்தைக் கட்டிவைத்து அமர்ந்திருந்தால்

    இட்டதெய்வமும் குருவும்  இயைந்துவந்து அருள்வாரோ


4. கட்டிவந்த மூட்டையை  விட்டொழிக்க ஏலாது

    கிட்டியுள்ள பிறவியிலும்  மூட்டை கட்டலாகாது

    நாட்டமெலாம் விட்டொழித்து  நல்லதையே நினைத்திருந்தால்

   ஆட்டமெல்லாம் ஓயும் முன்பு  வெட்டவெளியைத் தொடுவேனோ