வெள்ளி, 9 டிசம்பர், 2016

குயிலி,மஹாகவியின் காதலி

                                            

               காக்கை  குருவி  எங்கள் ஜாதி  என்றுபாடிய  பாரதி  ஒருகுயிலிடம்  காதல்வயப்பட்டுத்

தவித்ததை  எத்தனைபேர் அறிவர்? பாரதியின்  இலக்கிய நயமும்  காதல் சுவையும்  செறிந்த

குயில் பாட்டை  ஆழ்ந்து  படித்தால்   அவரின் காதல்  புரியும்!

                ' பட்டப்பகலில்  வந்த  நெட்டநெடுங்கனவில்  கன்னிக்குயிலொன்று  காவிடத்தே'

பாடியதாம்! அந்த இன்னிசைப்  பாட்டினிலே  மயங்கிய  நம் கவி  'மனிதவுரு  நீங்கிக்  குயிலுருவம்

வாராதோ, இனிதிக் குயிற்பேட்டை  என்றும்  பிரியாமல், காதலித்துக்  கூடிக்  களியுடனே

வாழோமோ? நாதக்கனவினிலே  நம்முயிரைப்போக்கோமோ? ' என்று  பல எண்ணினாராம்!

குக்குக்கூவென்று   குயில் பாடிய பாட்டினிலே  எத்தனையோ  பொருள்  தொக்கி  நின்றதாம்!

அத்தனையும்  அவனிக்கு  உரைப்பதற்கே  பாடிவிட்டாராம்  குயில் பாட்டு!

                     தென்புதுவையில்  கடலலைகள்  'வேதப்  பொருள்பாடி' வேகமாய்  வந்து  கரை

தழுவுமாம்! என்னே கவியின்  கற்பனை! அந்த அழகிய நகரின்  மேற்கே  உள்ள  ஒரு

 மாஞ்சோலையில் பேடைக்குயிலொன்று  வான்கிளையில்  அமர்ந்துகொண்டு , 'ஆண்குயில்கள்

மேனி  புளகமுற,' அத்தனைப்  புட்களும்  'காலைக்கடனிற்  கருத்தின்றிக்  கேட்டிருக்க'

மோஹனப்பாட்டொன்று  பாடியதாம். ' காதல் இல்லையேல்  சாதல் ' என்று  துயருடன்  நீண்ட

ஒரு பாடலைப்பாடியதாம். பாடல் முடிந்து அத்தனைப்பறவைகளும்  பறந்து சென்றபின்பு  நம் கவி

அந்தத் தனிமையில்   அதன் பாட்டில்  இழையோடிய  சோகத்தின்  காரணம்  யாதென்று

கேட்டாராம். அந்த  கானக்குயில்  தன்னைப் பற்றிப்  பலவும்  கூறி, அருவியோசையிலும் ,

கடலோசையிலும், மானிடரின்  தினசரி  செயல்களில்  வெளிப்படும்  ஒவ்வொரு  ஓசையிலும்

இசையை  உணர்ந்து  மனதைப்  பறிகொடுத்ததையும், தேவர்  கருணையினால்  யாவர்  மொழியும்

எளிதுணரும்  பேறு பெற்றதையும், மற்றும்  மானுடர்  நெஞ்சவழக்கெல்லாம்

தனக்குத்தெரிந்திருப்பதாகவும்  கூறிற்றாம். இந்தத்  தருணத்தில்  மற்ற எல்லப்பறவைகளும்

வந்துவிட, தனியே அளவளாவ முடியாமல்  போனது குறித்து வருந்தி 'என்மனதைப்

பறிகொண்டுசெல்கிறீர், நான்கு நாள் கழித்து வாரும், வராமல்போனால் ஆவி  தரியேன் ' என்று

துயருடன்  விடை கொடுத்து மறைந்துவிட்டதாம்.

                        ஒருநாள்  சென்று  மறுநாள்  கரைகடந்த  வேட்கையுடன்  பாரதி  அந்த

 மாஞ்சோலைக்குச்  சென்றாராம்  குயிலைக்காண விழைந்து. ஆனால்  அந்தோ, அன்று  அந்தக்

குயில்  ஒரு குரங்குடன் 'மானிடர் உம்மைத்  தமக்குத் தலைவரெனக் கொண்டாலும்

 மேனியழகிலும் மற்றெல்லா நேர்த்தியிலும், குதிக்கும் அழகிலும், ஈடுஇணையற்ற  திருவாலின்

அழகிலும் உமக்கு  நிகர் ஆவாரோ' என்று  புகழ்ந்து  'உம்  காதல் பெறும்  சீர்த்தி பெற்றேன்' என்று

வானரப்பேச்சிலேயே  பேசியதாம். யாதோ ஒரு  திறத்தால்  அதை பாரதி அறிந்து கொண்டு

 விட்டாராம்! நேற்று  தம்மிடம்  பாடியது போல்  'காதல் இல்லையேல்  சாதல் ' என்று  'ஆசை

ததும்பி  அமுதூறப்' பாடியதாம். இந்தக் காதல் பாட்டைக்  கேட்டு  அந்த ' வற்றற்குறங்கும்'

கள்வெறி கொண்டது போல்  'தாளங்கள்  போடுவதும், தாவிக் குதிப்பதுவும்  பல சேட்டைகள்

செய்து ' அரும்பொருளே , தெய்வமே  உன்னை முத்தமிட்டுக்   களியுறுவேன் ' என்று பல பேசி

'நின்னைப் பிரிவதாற்றுகிலேன்' என்றதாம். இதையெல்லாம்  கேட்டு  உள்ளம்  புண்பட்ட பாரதி

தன் கைவாளை  அதன் மேல்  வீசவும்  தாவி  ஒளிந்ததாம் ; மாயக்குயிலும்  மறைந்ததாம்.

குட்டிப்பிசாசுக் குயிலை எத்தனைத் தேடியும் காணவில்லையாம்.

                                     அடுத்த நாள்  காலை  சோலை வந்த பாரதி   அந்த நீலக்குயில் மோட்டுக்

கிளையில் அமர்ந்து நீண்ட கதை  சொல்லவும்  கிழக்காளை  மாடு ஒன்று  அதனை  ஆவலுடன்

கேட்டதையும் கண்டு  மனம் வெதும்பி  கைவாளை  வீச நினைத்தாராம். ஆனால் அந்தப்

பொய்ப்பறவைப்  பேச்சைக் கேட்டபின்  கொல்ல சூழ்ச்சி  செய்தாராம் ! அந்தக்காளையின்  நீள

 முகத்தையும், நிமிர்ந்திருக்கும்  கொம்புகளையும், பஞ்சுப்பொதிபோல்  படர்ந்த உருவத்தையும்,

  வீரத்திருவாலையும், இடிபோல 'மா' என்ற அதன் உறுமலையும்  மெச்சி," உன் மேல் மோகம்

 கொண்டுவிட்டேன்; உம்  முதுகில்  படுத்து, காதில்  மதுர இசை பாடி, உம்  வாலில்  அடி பட்டு

மகிழ்வேன்" என்று  காதல் மொழி பேசி  "காதலுற்று  வாடுகிறேன் , காதல் போயின் சாதல் " என்று

தன் பொய்ப் பாட்டைப்  பாடவும்  நம் கவி  அந்த தெய்வீகப் பாட்டினின்று  மீண்டு அறிவெய்தித்

தன் கைவாளை வீசினாராம். அது தன் மேல் படும் முன்பு  காளை ஓடிவிட, குயிலும் மறைந்து விட

"நாணமிலாக் காதல்  கொண்ட  நானும்  சிறு குயிலை  வீணிலே தேடியபின்  வீடு  வந்து

சேர்ந்தேன்"என்கிறார்.

                                          கானக்குயில்  பாரதியிடம்  காதல்  கதை உரைத்து அவர்

நெஞ்சைக்கரைத்துத்  தன்மேல்  பித்துப்பிடிக்க வைத்ததையும், கதையின் நடுவே  இடையூறாக

அத்தனைப்  புட்களும்  வந்ததையும், இன்னொரு நாள்  ஆண் குரங்கும், மற்றொரு  நாள்  கிழக்

காளையும்  வந்து  தனக்கு  எதிரிகளாக  ஆனதையும், இத்தனைக்கு நடுவில்  தான் குயிலின்மேல்

பைத்தியமாய்க்  காதல்  கொண்டதையும்  நினைத்து நினைத்து  எதுவும் விளங்காமல்

 கண்ணிரண்டும்  மூடக்  கடும் துயிலில்  ஆழ்ந்து விட்டாராம்.


                                               குயில் சொன்ன  நான்காம்  நாளும் வந்தது.பாரதி வீட்டு மாடமிசை

நின்றிருந்த போது காட்டுத்  திசையில் ஒரு கரும்பறவை தெரியக்கண்டு  குயிலை நினைத்து

வீதிக்கு வந்து  கரும் புள்ளியாய்க் கண்ட அவ்வுருவத்தைத்  தொடர்ந்து  செல்லவும், இவர் நின்றால்

  தான் நிற்பதுவும், சென்றால் தான் செல்வதுமாக  அது  இவருக்கு  வழி காட்டிக் கொண்டு அந்த

மாஞ்சோலைக்கு  சென்று மறைந்ததாம்.அங்கு ஒரு மரக்கிளையில் அமர்ந்து 'தன் பொய்க்காதல்

பழம்பாட்டை' அது பாடவும் அதன் மேல் சினம் கொண்டு  மனம் குமைந்து " குரங்கினையும் ,

காளையையும்  நினைத்து  நீ பாடும்  இந்த இழிவான பாட்டைக் கேட்க  என்னை  எதற்கு  இங்கு

நடத்தி வந்தாய் " என்றாராம் இவர். அதனைக் கொன்றுவிட  நினைத்துப் பின் மனம் இளகி  விட்டு

விட,  அந்தக்குயில்  கண்ணிலே நீர்பெருக, தன் மேல் பிழை ஏதும் இல்லை  என்று சொல்லித் தன்

பூர்வ ஜன்மக்கதையைக் கூறிற்றாம்.


                                              முன்பொருநாள் இந்த மாயக்குயில்  பொதிகைமலைக்கருகில் ஒரு

சோலைதனில் ஒரு மரக்கிளையில்  ஏதேதோ  எண்ணி அமர்ந்திருக்கையில்  ஒரு முனிவர் அங்கு

வர, அவர் காலில்  விழுந்து வணங்கி  தான் கீழ்ப் பறவை ஜாதியில்  பிறந்து, மற்ற

ஜாதிக்குயில்கள்போல் இல்லாமல்  வேறுபட்டு இருப்பதுவும், எல்லோர்  மொழியும்  தனக்கு

விளங்குவதும் , மானுடர் போல்  மனநிலை  வாய்த்திருப்பதுவும்  ஏன்  என்று கேட்க  அந்த முனி

 அதன் முன்ஜன்மக் கதையைக்  கூறினாராம். இக்குயில்  முற்பிறப்பில்  சேர நாட்டின் தெற்கே  ஓர்

மலையில்  வீரமுருகனென்ற வேடர் குலத்தலைவனுக்கு  மகளாகப் பிறந்தாளாம்.சின்னக்குயிலி

என்று  இவளுக்குப் பெயராம். மிக அழகு  பொருந்திய  அவளை  மாடன் எனும் பெயர்  கொண்ட

மாமன் மகன் ஒருவன் காமம் மிகக்கொண்டு பரிசுகள் பலவும் கொடுத்து  மணக்க விரும்பினானாம்.

அவனுடைய  வற்புறுத்தலினால்  அவனுக்கே மாலை இட இவள் சம்மதித்தாளாம். இவள் அழகு

பற்றித் தெரிந்து வேறொரு வேடர் தலைவன்  தன மகன் நெட்டைக் குரங்கனுக்கு  அவளை  மணம்

முடிக்க  விரும்பி  அவள் தந்தையிடம் பேசி பன்னிரண்டு நாட்களிலே  மணம் செய்ய  முடிவு செய்து

விட்டாராம். இதுகேட்டு  மாடன் அவளிடம்வந்து சினம் கொண்டு  பேசியபோது  அவள் அவனிடம்

உள்ள கருணையினால் அவனை ஆறுதல் செய்து  குரங்கனுக்கு  மாலையிட்டாலும் ஏதேனும்

பேதம் செய்து  மூன்றே  மாதங்களில்  திரும்பி வந்துவிடுவதாகவும்  எட்டு மாதங்களில் இவனுக்கு

மனைவியாவதாகவும்  உறுதி செய்தாளாம். இதெல்லாம் அவன் மீது கொண்டகருணையினாலாம்

காதலினால் இல்லையாம்.

                                        சில தினங்கள் சென்ற பின்பு குயிலியும்  தோழியரும்  கானகத்தே

களித்தாடும்  சமயத்தில்  வேட்டைக்கென  வந்த சேர இளவரசன்  குயிலியைக்கண்டு மையல் மிகக்

கொண்டு இவளை அடைய  வேண்டும் என்று  முடிவு செய்தானாம்.மன்னன் மகனைக்கண்டு

தோழியர் அஞ்சி விலகிச்சென்று விட்டனராம்.இவன் குயிலியிடம் காதல்  மிகவே கொண்டு

 "உன்னைப் பிரிதலறியேன் என்றானாம். மனதில் பெருகிய காதலை அடக்கி,அவன் மாளிகையில்

கல்வியிலும், கலைகளிலும்,அழகிலும் சிறந்த எத்தனையோ பெண்கள் இருக்க  குறமகளான

தன்னை அவன் நாடவேண்டாம் என்றும், மற்றும் மன்னர் பலர் தங்கள் பெண்களை  அவனுக்கு

மணம் முடிக்க  வருவாராதலினால் தன்னை விட்டு விலகுதல் வேண்டும் என்றும்  கூறி  அவள்

கலக்கமெய்தி  நிற்கையிலே, பக்கத்தில் வந்து முத்தமிட்டு  அவளைத்தழுவி  "இனி உன்னைப்

பிரியேன், நீயே என் மனைவி , என் ராணி , நின் இல்லம் வந்து பெண் கேட்டு நின்னை  வேத நெறி

தவறாது  மணம்  முடிப்பேன்" என்றானாம். இதைக்கேட்டுக் குயிலி மனம் மகிழ்ந்து , நாணம்

தவிர்த்து நனவும் தவிர்ந்து  அவனைக் கட்டியணைத்து, இன்பக்கனவில   இருவரும்

மூழ்கியிருக்கையிலே, ஊரிலிருந்து  வந்த நெட்டைக்குரங்கன்   அவள்  தோழிகளோடு  காட்டில்

விளையாட  வந்தது கேட்டு  அங்கு வர, இவர்கள்  இருக்கும் நிலை கண்டு  சினமுற்று, "சிறுக்கி

தீது செய்துவிட்டாள், என் மானத்தைத்  தொலைத்து  விட்டாள் " என்று  கலங்கினானாம்.

மாப்பிள்ளை ஊரிலிருந்து வந்ததையும்  இவள்  சென்ற தோப்பிற்கு  ஏகியதையும்  யாரோ

மாடனுக்குக்  கூறி விட , அவனும்  கானகத்துக்கு விரைந்தானாம். கனல் கக்கும்  விழிகளுடன்

இவன் நிற்பதை  மன்னன் மகன் பார்க்கவில்லையாம் ; நெட்டைக்  குரங்கன் நிற்பதை  இவன்

பார்க்கவில்லையாம். குயிலியும் அவள்காதலனும்  இன்பசுகத்தில்  மூழ்கியிருக்க, மாடனும்

குரங்கனும் சினத்துடன்  வாளுருவி  மன்னவன் மீது வீச  வெட்டிரண்டு விழுந்தனவாம்  மன்னவன்

முதுகில் ; சட்டென்று  மன்னவனும் திரும்பி  வீச்சிரண்டில்  அவ்விருவரையும்  வீழ்த்தினானாம் .

இருவரும்  பிணமாகி விட , மன்னவன் சோர்வெய்தி  மண்மேல் வீழவும் , குயிலி அவனை  வாரி

எடுத்து மடியில் வைத்துப் புலம்பவும், "இனி  நான் பிழைக்கமாட்டேன்  ஆனால் அடுத்த பிறவியில்

உன்னுடன் இன்பமாக வாழ்வேன்"  என்ற  அரச குமாரன், கண்கள்  மூடி புன்னகைத்தபடி  மரித்து

விட்டானாம்.

                                                     அந்த  முனி  மேலும்  சொன்னாராம் ;  உயிர் நீத்த அரசகுமாரன்

இப்போது  தொண்டை நாட்டின் கடற்சார்ந்த ஒரு ஊரில் மானிடனாகத்  தோன்றி  வளர்ந்து

இக்கானகத்தே வந்து இவள் பாட்டைக்   கேட்டு மயங்கி மறுபடியும்  இவள் மேல் காதல்

கொள்வானாம். கர்மவசத்தினால் குயிலி மற்றும் ஒரு வேடனுக்கு மகளாகப்  பிறக்கவும்,

வன்பேயாய்க்  காடு  மலையெல்லாம்  சுற்றி வரும்  மாடன், குரங்கன் இருவரும் இதனைக்

கண்டு கொண்டு  காழ்ப்புணர்ச்சியால்  இவளைக்  குயிலாக்கி, மறுபடியும்  மானிடனாகப்  பிறந்த

மன்னன் இவளைத்  தேடி வரும் போது மாயச் செய்கை  பலவும் செய்து  அவனை  'இவள் வஞ்சகி'

என்று இவள் மீது  ஐயம் கொள்ளச் செய்து  இவளை விட்டு விடும்படி செய்து விடுவார்களாம். "பின்

நடப்பதை  நீ கண்டு கொள்வாய் " என்று சொல்லி சந்தி  பூஜை செய்யச் சென்று விட்டாராம்.

                                             
                                                    இத்தனையும்  பாரதியிடம்  சொன்ன குயில் "பொய்  ஏதும்

இன்றி முனிவர் கூறியதனைத்தையும் அப்படியே சொல்லிவிட்டேன் ; காதலருள் புரிவீர்,

இல்லையேல் தமது கையால் எனைக்கொன்று சாதலருள்வீர் "  என்றவண்ணம்  அவர்

  கையில்  வீழ்ந்ததாம்.அன்புடன்  அருங்குயிலை இன்பவெறியுடன்  கவி முத்தமிடவும் கோகிலம்

மறைந்து மின்கொடி போல் தோன்றிய பெண்ணொருத்தி அங்கு நிற்கவும், பெருங்களிப்பெய்திய

இவர் அந்த அற்புதத்தை சொல்லில் வடிக்கவொணாது  என்று சொல்லி , சொல்லிவிட்டார்  ஒரு

காவியமாய்! இந்தப்பாவையுடனேயே  சோலைக்குள்  சென்று மறைந்தாராம்,

                                                  ஓஹோ! எனக் கதறி  கண் விழித்துப்  பார்த்து, இத்தனையும் மாலை

மயக்கத்தில்  வந்த" கற்பனையின் சூழ்ச்சியென்றே  கண்டுகொண்டேன் " என்று  சொல்லி  ஒரு

விருந்தையே  நமக்குப் படைத்துவிட்டார்!

                                      இடி முழக்கத்துடன் சுதந்திரப்  பாடல்களால் மக்களைத் தட்டியெழுப்பிய

இந்த மீசைக்காரக் கவியின் மனதுள் இருந்த காதல்  எனும்  உணர்வை அறிந்து, மனம்  நெகிழ்ந்து

"யான் பெற்ற இன்பம்  பெறுக  இவ்வையம் " என  எண்ணி  இக்கட்டுரையைப் புனைந்துவிட்டேன்.


                                    கலைமகளின் பெயரைப்பெற்று , கலையுடனே  வாழ்ந்து, களிறு  ஒன்றால்

சாக்காட்டினை சந்தித்த  மஹாகவியின் பிறந்ததின  காணிக்கையாக இதனை  சமர்ப்பிக்கிறேன் .

படித்துவிட்டு  தங்கள் மேலான கருத்துக்களைத்  தெரிவிக்குமாறு  கேட்டுக் கொள்கிறேன் .

( ஆங்கிலத்திலும் இருக்கலாம் )

                                         இந்த முயற்சியில்  எனக்கு உறுதுணையாய் இருந்து, ஊக்கமளித்து  தன்

கருத்துக்களையும்  நல்கி உதவி புரிந்த  உற்ற தோழி உஷாவுக்கு  என்  மனமார்ந்த  நன்றி.                   

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

அறியாமையின் அறைகூவல்

                                  
             1.  தெய்வமே  அமைதிகொடு  உன்னிடம்  கெஞ்சுகிறேன்
                  செய்வதறியாது   சோர்வுற்றுச் சலித்துவிட்டேன்
                  உய்வது எங்ஙனம் என்பதை யான் அறியேன்
                  பெய்வாய் உன் அருளை நம்புகிறேன் நான் சிறியேன்

              2. இன்பதுன்பம் இரண்டையும்  சமமாகவே  நினை
                  என்பதனை  நீ சொன்னாய் அறிவேன்-ஆதலின்
                  இன்னல்கள்  மேன்மேலும் வந்தெனைத் தாக்கினால்
                   உன்னையே  நினைத்திருப்பேன் என்று நீ நினைத்தாயோ

              3.  நான் எனது  என்பதின்னும்  நீங்கவில்லை
                   என்கணவன் என்மக்கள் என்ற எண்ணம் போகவில்லை
                   உணர்வுகளை உணர்ச்சிகளை எமக்கிங்கு ஏன் கொடுத்தாய்
                   திணறுகிறோம்  அவை எமையே உணவாகக்  கேட்பதனால்

               4. உன் நிழல் உன்னுடன்  என்று என் அன்னை சொன்னார்
                   முன்வினை தொடரும் என்று சொன்னார் வள்ளுவனார்
                   எத்தனைதான் கற்றிருந்தும் நல்லவை பல கேட்டிருந்தும்
                   அத்தனைக்கும் மனம் ஏன் பக்குவம் பெறவில்லை
   
                5. அப்போதைக்கப்போதே  சொல்லிவை என்றிட்டார்
                    எப்போதும் உன்னிடம் இடர்கள் சொல்லி அழுகின்றேன்
                    இத்தருணம்  தெளிந்திட்டேன்  உன் பரிவை  உள்ளுணர்ந்தேன்
                     ஒத்தபடி  வாழ்ந்திடுவேன் உன் நாமம் நாவில்விடுவேன்

சனி, 24 செப்டம்பர், 2016

மஹாகவி பாரதிக்கு என் மனமார்ந்த அஞ்சலி

   
1. பாரதனில்  பெருமை  பெற்ற  பாரதந்தன்னில்
            
    பாரதியென்றோர்   பாவலன்   பிறந்திட்டான்

    பா  ரதத்திலேறி  பல்புகழ்  பெற்றிட்டான்

    பாரதத்தாய்  பரிதவிக்கப்  பரமனடி சேர்ந்திட்டான்


 2. 'பாட்டுக்கொரு புலவன்  பாரதி ' யென  பெயர்  பெற்றான்

     நாட்டோர்  நலனையே  நினைவினில்  கொண்டிருந்தான்

     சாட்டையடிஎனவே  சந்தமழை  பொழிந்தான்

      நாட்டினான்  நமதுரிமைதனை பாங்குறவே  பாட்டினிலே

   
 3. கண்ணனிடம்  காதல் மிகக்கொண்டு மனம்  களித்திருந்தான்

     கண்ணன்  அங்கவனுக்கு  யாவதுமாய்  நின்றிருந்தான்

     கண்ணெனவே  காத்தான் தாய்மொழிதனையும்  நாட்டினையும்

     கண்ணுக்குக்கண்ணான கவிஞனவன் இன்றிலையே

                 
4. பாப்பா பாட்டும்  குயில்பாட்டும்  பாஞ்சாலி சபதமும்

    காப்பாற்றும்  காளியின்மேல்  கவிதையும்  செய்திட்டான்

    கூப்பாடு  போட்டு  சாதி வேற்றுமையை  குழிபுதைத்தான்

    பாப்பாவும்  அவன் பெருமையினை  பள்ளியில்  பயின்றிடுமே


5. விடுதலை  விடுதலையெனவே  வீரமுழக்கம்  செய்திட்டான்

     சடுதியில்  சந்தித்தான்  சாக்காட்டினை  அவனும்

     கெடுதி  செய்தனரே  கடவுளரும்  கண்ணிலையோ

     விடுதலையினை  அவன்  விண்ணின்று  கண்டானோ

           
6. பார்த்திருந்தேன்  பாரதியை  ஞானி  அவனென  பாட்டிசொன்னர்

    சீர்திருத்தவாதியதனால்  சிந்தைதனில்  இடம் கொண்டான்

    ஏர்த்தொழிலும்  போர்த்தொழிலும்  ஏற்றமுற்றன  அவன் பாட்டில்

    பேர்பெற்ற  தமிழர்  யாம்  அவன் பெருமை  பேசுவமே

  
                
                 

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

வண்ண வில் ஒன்று கண்டேன் வானிலே

பிற்பகல்  பொழுதொன்றில்  விண்ணில்  ஒரு  விந்தை கண்டேன்!
   
பகலவன்  மேல்  மோகம்  கொண்டு முகில்கள் வந்தன  மழை  பொழிந்தன 
    
சூரியக்கதிர்  ஒருபுறம்  மாரியின்  சதிர்  மறுபுறம்!
    
கண்ணுக்கினியதாய்  வண்ணமயமானதாய்  நிகழ்ந்தது  ஒரு விழா  ஆங்கே 
   
கானக்குயிலும்  மோனமயிலும்  மயங்கும்  ஒரு வண்ண வில்  வானில்  விளைந்தது!
   
விளையாட்டாய் வந்து  விரைவில் மறைந்தாலும்  உள்ளம் கொள்ளைபோனது 
                                                                                                 தெள்ளத்தெளிவானது!
   
ஏழு  நிறங்களும்  ஏழு ஸ்வரங்களாய்  நெஞ்சை  நிறைக்க  எழுதிவைத்தேன் 
                                                                                                       இதை ஏழு வரிகளில்!
      

ஞாயிறு, 17 ஜூலை, 2016

இறைவனால் இயற்கை -இயற்கையில் இறைவன்

1.இயற்கை உண்டு இறைவன் இல்லை என்கிறார் இங்கு சிலர்
   இறைவனால் இயற்கையும் இயற்கையில் இறைவனும் என்றவர் அறிந்திலர்
   இயற்கையெனும் விருந்தினை யார் சமைத்தார் தரணியிலே
   இறைவனும் இறைவியும் சேர்ந்து செய்த விந்தை இது

2. நான் எனது என்கிறார் இங்கு இவர்
   தான் யார் என்பது ஏனோ அறிந்திலர்
   மூலத்தின் கூறாய் தாம் வந்தது தெரியவில்லை
   காலம் வேறாய்  ஆனபின் உணர்வாரோ

3.  கருவினை உருவாக்கி  உயிர் கொடுப்பேன் என்கிறார்
     செருக்கினால் பேசுகிறார்  பெருமை மிகவே  கொள்கிறார்
     தனக்கும் மேல் இருப்பவனை அறியவில்லை
     மனக்குறை நீக்கும் மூலப் பொருள்  தெரியவில்லை

4.  கருவினின்று  உருவா  உருவினின்று கருவா
     விதையினின்று  செடியா  செடியினின்று  விதையா
     எதைக் கொண்டு எதைப் பெற்றோம் என்பது யார் அறிவார்
     கருவுக்கு விந்துவும் தருவுக்கு விதையும் யார் இங்கு கொண்டு தந்தார்

5.   வினா உண்டு  விடை இல்லை  என்ன இது  விசித்திரம்!
      அனாதி காலமாய்  தொடர்ந்து  வரும்  சரித்திரம் !
      கனாக் கண்டது போல்  பிறப்பதுவும்  இறப்பதுவும்
      வினோதமாய்  மாறி  மாறி  சுற்றும் ஒரு சக்கரம்

6.   விஞ்ஞானம்  கற்றுணர்ந்து   மெய்ஞ்ஞானம் புரிந்துணர்ந்து
      அஞ்ஞான இருள் நீக்கி  இறைஞானம்  உய்த்துணர்ந்து
      பொய்யானவற்றை  விட்டொழித்து  விழித்துணர்ந்து
      மெய்யாக  வாழ்ந்திடுவோம் மெய்ப்பொருளைக் கண்டறிவோம்





புதன், 16 மார்ச், 2016

பஞ்ச பூதங்கள்

ஐம்பூதங்களின்  ஆற்றலை  அழகுறச்  சொல்லுவோம்
ஐம்புலன்களால்  அவற்றை  நம்முள்  உணருவோம்
ஐயம்  எமக்கில்லை எம் தெய்வம் அவையே
ஐக்கியப்பட்டு  நின்று அவற்றைப்  பேணுவோம்

ஆகாசம் :

அண்ட சராசரங்களையும்  நின்   ஆளுகைக்குட்படுத்தி
பிரம்மாண்டமாய்ப்  பரவிய பிரபஞ்சக்  களமே
விண்ணே, வெட்டவெளியே,ஆகாசமே
ஆதியாய்  அனாதியாய்  பரம்பொருளாய்ப்
பேரியக்க  மண்டலமாய்  எங்கும்  பரவிய  மெய்ப்பொருளே
எம்முள்ளும்  சூழ்ந்து நிற்கும் உனை   வணங்கி  காப்புப் பெறுவோம்

காற்று :
புவிக்கொரு  கவசமாய்  எமைச் சுற்றி  இயங்கும் காற்றுவெளியே
மெய்க்குள் சுவாசமாய் எமை இயக்கும்  உயிர்க்காற்றே
நாதத்துள்  நரம்பாய் பிராணிகளுள் நாடியாய் நன்மை செயும் நல்லவனே
அசைவுக்கு ஆதாரமாய்  ஓசைக்கு  உணர்வாய்
இசைக்கு  உயிர் கொடுத்து  இன்றெனைப்  பாடவைத்து
பலகோடி நலன் நல்கும்  வாயுதேவனே  வாழவைப்பாய்  எமை இன்று

நெருப்பு:
தீயே! தீயதைப்  பொசுக்குவதும்  தின்பதை சமைப்பதும் நீயே
உலகை இயக்கும் வெப்பமாய் ,உயிரினங்களை உலவச்செய்து
உடலினுள்ளே ஊடுருவி  உயிர் சக்திக்கு உரமளிப்பாய்
காலமெலாம்  கடமை ஆற்றும் கர்மயோகியே
உன்னுதவி இன்றி  உயிரினங்கள் குளிர்ந்து விட்டால் உய்வதேது?
கருத்துடன்  உன்னுயர்வு  உணர்ந்து  ஊக்கமும்  ஆக்கமும்  பெற்று வாழ்வோம்

நீர் :
உலக உருண்டையை சூழ்ந்துள்ள கடலே, நீரே
சிற்றாறாய் ,பொய்கையாய் , நீர்வீழ்ச்சியாய் ,மஹாநதியாய் ,
மாக்கடலாய்,நீராவியாய் ,மேகத்தினின்று மழையாய்
மண்ணுலகம் வந்தடைந்து  வையகத்தை  வாழவைக்கும்
வள்ளலே! உளம்குளிர  உனை  வாழ்த்துவோம்
வாழ்வில்  மேன்மையுற்று, மேம்படுத்துவோம்  உனையும்

நிலம் :

நீரினால் சூழப்பட்ட  நிலமடந்தை  மண்ணகமே
புவியே,பூமித்தாயே ,பொறுமையின் சிகரமே
அகழ்வாரையும் ,இகழ்வாரையும் தாங்கும் தரணியே !
ஐம்பூதங்களின்  பரிணாம எழுச்சிதனில்
ஐந்தாம் நிலையில் அமைந்த நிலமே
நின்னைப்  பாதுகாத்துப் போற்றிப் பயன் பெறுவோம்


நிலமடந்தையும் , நீரும், நெருப்பும், நானிலம் சூழ் காற்றும் ,
நீள்  விசும்பும்  நிச்சலும் நன்மை பயக்க
நாம் இவற்றின் ஆற்றலை  ஆக்க பூர்வமாக்குவோம்
இவை ஐந்தும்  நம்முள்ளே ஒன்றினுள் ஒன்றாய்  இயங்கும் திறன் உணர்வோம்
இவற்றோடு  இயைந்து  வாழ்வினை மேம்படுத்தி
இயற்கையின்  மேன்மையைப்  போற்றி வாழுவோம்

திங்கள், 22 பிப்ரவரி, 2016

அழகனுக்கு ஒரு 'ழ 'கர மாலை

மனம் குழைய அழைத்தால் நீ குழந்தையாய் வருவாயா ?
தமிழில் பாடி உனை அழைத்தால் தவழ்ந்திங்கு வருவாயா?
தளர்நடை நடந்துவந்தென்  மடியினில் அமர்ந்து கொண்டு
மழலையில் மிழற்றும் உனை தழுவிமனம் மகிழ்வேனோ?

ஈரேழு உலகமதை உன்கருவில் உருவாக்கி  ஓயாது ஒழியாது காக்கும் உன் புகழ்பாடி
பெரியோனாய் உனை எட்டத்தில் வைத்து விட்டால்
எளியவனாய் சிறுவனாய் என்னருகில் வருவாயா?
எழில்பொங்க குழலூதி மனம் கொள்ளை கொள்வாயா?

ஆழ்மனக் காதலுடன் ஆழிமழைக் கண்ணனை
குழவி ஆக்கிக் களிப்பெய்தி பண்ணிசைத்துப் பாராட்டி
நீராட்டி  அமுதூட்டி  தாலாட்டிப் பரிவு செய்த
பெரியாழ்வார் பெற்ற இன்பம்  சிறியேன் நான் அடைவேனோ?