ஞாயிறு, 10 டிசம்பர், 2017

அகர முதல எழுத்தெலாம் அனுமனே

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு அகரம் முதல் எல்லா எழுத்துக்களிலும் கவிதை செய்து இசையமைத்து பாடுமாறு அனுமன் எனைப்பணித்து அவன்விருப்பத்தை நிறைவேற்றிக்கொண்டான்.இப்போது அனுமத் ஜயந்தியை முன்னிட்டு இந்த வலைத்தளத்தில்

இதனை அளித்துள்ளேன்.

என் மகள் ஸிந்துஜா இதனைப் பாடி அவளுடைய வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறாள்.

அவளுடைய விலாசம் கீழே உள்ளது.

https://octaves.blogspot.com/2014/02/anumane.html

ராகம் :காபி

அனுமனே அஞ்சனை மைந்தனே

அண்ணல் ராமனின் ஆருயிர் அன்பனே

இல்லாளை பிரிந்து இடருற்ற ஈசனை

உடனிருந்து காத்து ஊக்கம் அளித்தனை

எத்தனை இடர்கள் எல்லாம் கடந்தனை

ஏவல்புரிந்து ஏற்றம் பெற்றனை

ஐயன் ராமனுடன் ஐக்கியம் ஆயினை

ஒப்புவமை இல்லா ஓரிடம் சேர்ந்தனை

ஔடதம் பெற நீ சைலம் பெயர்த்தனை

அஃதினை கொணர்ந்து இளவலை காத்தனை


ராகம் :ஹிந்தோளம்

கவினுறு கானகத்தே கிஷ்கிந்தையதனில்

கீர்த்தி பெற்ற கவியரசன் வாலி வதம் அடைய

குரங்கரசன் அவன் தம்பி ஸுக்ரீவ ராஜன் உன்னை

கூவி அழைக்கத் தாவிச்சென்று கடல் கடந்தாய்

கெடுதிக்கு கேடிழைத்து கமலைக்கு கை கொடுத்தாய்

கொக்கரித்து கோபித்து கொட்டம் எல்லாம் முறியடித்தாய்

கௌசிகன் சங்கடம் சடுதியில் தீர்த்தவனை

ஸாமான்யமானவனாய் சாதிக்க வந்தவனை

சிந்தையில் பூட்டிவைத்து சீலத்தில் நீ உயர்ந்தாய்

சிறு பிள்ளை பருவத்தில் சுடும் என்று அறியாது

சூரிய பழம் பிடிக்க சீறிப் பறந்தனை

செல்வமே, சேடனே

சைனியத்துடன் ஈழத்தை வீழ்த்தினையே


ராகம் :மோஹனம்

சொக்கனே சோர்வினை போக்கிடும் சௌந்தர்ய ரூபனே

ஞாலம் போற்றும் ஞானியே

தலைவன் தாள் பணிந்து தின்மைக்குத் தீவைத்தாய்

துன்பம் துடைத்து தூயோனை காத்திட்டாய்

தென்னிலங்கை கோமானை தேசு இழக்கச் செய்தாய்

தையலைக் காத்து தொல்லையையைத் தோற்கச் செய்தாய்

தௌவைதனை நலியவிட்டு நாணியோடச் செய்திடுவாய்

நிலம் நீர் எங்கிலும் நுணுகி நீ நூறுசெய்வாய்

நெக்குருகி நேர்த்திசெய்தால் நைந்துருகி நலம் தருவாய்

நொந்துவந்த உள்ளமதில் நோவினை நீக்கிடுவாய்


ராகம்: திலங்

பரமன் அருகினில் பாங்குடன் நீ இருந்தாய்

பிறன்மனை கவர்ந்தோனை பீழையில் வீழச் செய்தாய்

புந்தியில் சிறந்து நின்றாய் பூவையைக் கண்டு வந்தாய்

பெம்மான் ராமனை பேசுவோரை நீ சென்று

பையவே பாலித்து பொழிவாய் நின்னருளை

போர்க்களத்தில் பௌருஷத்தால் பொலிந்து நீ நின்றாய்

மங்கினார் மாண்டார் மாருதி உனைக்கண்டு

மிகுந்திலர் மீண்டிலர் முன்வினை பயனால்

மூடரவர் மதிகெட்டு மெய்ம்மையை கண்டிலரே

மேன்மை நீ கொண்டாய் மையல் தரும் எழில் கொண்டாய்

மொய்க்கின்றார் மாந்தர் உன் மோஹன ரூபம் கண்டு

மௌனமாய் மறம் காட்டி மன்னவரை மலைக்க வைத்தாய்


ராகம் :ஆஹிர்பைரவ்

யமன் யாண்டும் துணிவு கொளான் சிரஞ்சீவி உனைக்கொள்ள

யுக்தி இலன் யூகித்திலன் யோகி உன்னை எதிர்கொள்ள

யௌவன ராஜன் நீ வஞ்சகரை வகிர்ந்ததெல்லாம்

வான் புகழ் வில் வீரன் வெகுண்டு உன்னை வேண்டியதற்கே

வையம் வந்த தெய்வமதை வௌவி நீயும் உயர்வடைந்தாய்

வானரமாய் வந்த வாயுமைந்தனே போற்றி

அகரமுதல எழுத்தெல்லாம் ஹனுமனுக்கர்ப்பணிக்க

அறிவிலி ஆசை கொண்டேன் ஆழம் அறியாமலே

ஈங்கீண்டு இயம்பிவிட்டேன் இச்சைகொண்டு இவ்வண்ணம்

வாயுமகன் பிழை பொறுத்து வினை தீர்த்து அருளட்டும்

செவ்வாய், 7 நவம்பர், 2017

பெரியாழ்வார்,பாரதியார் -இவர்கள் கண்ட கண்ணன்


1. விட்டுச்சித்தர் அவதரித்தார் வில்லிபுத்தூரதனில்

    எட்டயபுரம் பெற்றது பாவேந்தர் பாரதியை
 
     இருவரும் பாடினர் கண்ணனைப் போற்றினர்

     இறும்பூது எய்துகிறோம் தமிழராய்ப் பிறந்ததற்கே


2.  பரமனுக்கு விட்டுச்சித்தர் பல்லாண்டு பாடினார்

     அரங்கனின் எழில் நிலைக்க அவ்விதம் வாழ்த்தினார்

      கண்ணெச்சில் விழாதிருக்கக் காப்பிட்டுக் களிப்புற்றார்

     கண்ணனை சேயாக்கித் தான் அவனின் தாயானார்


3.  கொஞ்சிக் கொஞ்சி  அவர் வடித்த கண்ணனின் லீலைகள்

    நெஞ்சினிக்க விருந்தாயின நமக்கவர் திருமொழியில்

    தன்பிள்ளை அவன் என தாயாகித் தொட்டிலிட்டு

    அன்பின் மிகுதியால் அரவணைத்து மகிழ்ந்திட்டார்


4. அடிமுதல் முடிவரை கண்ணனை அனுபவித்தார்    

    ஓடியோடிப்போகாதே முலையுண்ண வாவென்றார்

    புழுதியளைந்த பொன்மேனி நீராட்டித் திளைத்திட்டார்

     குழல்வாரி பூச்சூட்டிப் பாமாலை அணிவித்தார்

 
 5.  பாரதியார் கண்ணனைத் தந்தையென்றார் தாயென்றார்

     சாரதியவனைத் தன் சற்குருவும் என்று சொன்னார்

     தீராத விளையாட்டுப்பிள்ளை என் பிள்ளை என்றார்

     ஆறுதல் சொல்லும் தோழனும் அவன் என்றார்

    
6.  கண்ணனடிமை நான் என்றார் ஆண்டான் அவன் என்றார்

     அண்ணல் அவன் அரசன் என்றார் காந்தனும் அவன் என்றார்

     காதலனும் சேவகனும் சீடனும் அவன் என்றார்

     ஆதலினால் அவருக்கு ஆயினன் அவன் அனைத்துமாய்

   
7.  பெண்ணாகவும் ஆக்கினார் கண்ணனை நம் கவி

      கண்ணம்மா என் குழந்தை பிள்ளைக்கனி அமுதென்றார்

     'நிலவு  அவள் ' என்று சொல்லி காதலியும்  ஆக்கிவிட்டார்

      குலதெய்வம் அவள் என்றார் அவளையே  சரணடைந்தார்


8. ஒன்பதாம் நூற்றாண்டில்  ஆழ்வார் அவதரித்தார் -பத்

     தொன்பதாம்  நூற்றாண்டில்  பாரதியார் பிறந்துவந்தார்

     ஒத்தகருத்தில் இவ்விருவர் 'பிள்ளைத்தமிழ் 'பாடியதை

     மெத்தவே வியக்கின்றேன் மகிழ்ச்சி மிக அடைகின்றேன்



   

வெள்ளி, 2 ஜூன், 2017

சூரியநமஸ்காரம்


                   1 . கிழக்கே  கதிரவன்  கிளர்ந்தெழும்   தருணமதில்
                   
                       சழக்குகள் அகற்றி ஒழுக்கமாய்  இருந்திடவும்
                   
                       வழிக்குத்துணைநின்று  ஒளிதரவேணும்  எனவும்

                       விழிக்கையில் அவனைத்தொழுது விழிப்புடன் இருந்திடுவோம்

   

                     2. ஆதவன் அருள் இலையேல்  உலகெலாம்  இருளே

                        ஆதலினால்  துதி செய்வோம்  அவன்அன்பை  உணர்ந்திடுவோம்

                         வெப்பமின்றி  உயிரில்லை  பரிதியின்றி  பயிரில்லை

                          தப்பாமல்  போற்றிடுவோம்  தலைவணங்கி  வாழ்த்திடுவோம்்,

       

                      3. பரிதியைப் பாரதி  என்னவென்று  புகல்கிறான்
       
                         'வெம்மைத் தெய்வமே', 'ஒளிக்குன்றே'  என்கிறான்

                         'அறிவின் மகள் ஒளி' அவளே தெளிவு  என்று

                          செம்மையாகச்  சொல்லிவிட்டான்  வசனத்தில் அன்று

                       
                       4. சோதிப்பிழம்பவன்  சோர்வினைப் போக்குபவன்

                           ஆதியுமாய்  அந்தமுமாய்  யாவுமாகி  விளங்குபவன்

                           சூரியனை  இதயத்தினுள்ளே  இருத்தி  வாழ்த்தி

                            வீரியம்  பெற்றிடுவோம்  ஆரியராய்  வாழ்ந்திடுவோம்

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

கண்மணி உஷாவுக்கு என் அன்புக்காணிக்கை



போனமுறை  இந்த  வலைத்தளத்தில் வெளியான  கட்டுரை  உருவாகும்  சமயம்  எனக்கு உறுதுணையாயிருந்த  இனிய உஷா  இன்று  தெய்வமாகிவிட்டாள்.இப்போது  வெளியாகும் இந்தக்கவிதை  அந்த  உயர்ந்த  ஆத்மாவுக்கு  ஒரு  அஞ்சலி.


                           அருமையான  உஷாவே  எளிதினில்  மறைந்துவிட்டாய்
                           ஒருமையில்  உனை  அழைப்பேன்  இளையவள் நீ, இனியவள்  நீ
                           காற்றினில்  கரைந்தாயோ, விண்ணுக்கு  விரைந்தாயோ
                           ஆற்றொணாத் துயர்  கொடுத்து  மண்ணுக்குள்  மறைந்தாயோ

                           தவமிருந்து  பெற்ற தாயைத்  தவிக்கவிட்டு  எங்குசென்றாய்
                           இவளே  எனக்கெலாம்  என்றவரை  ஏன்  பிரிந்தாய்
                           கண்மணிகள்  போன்ற  பெண்களை  ஏன் மறந்தாய்
                           எண்ணி  எண்ணி  ஏன் மனம் புண்படச் செய்துவிட்டாய்

                           காலையும் நீயே  மாலையும்  நீயே
                           உன்  பெயரின்  பொருளை  நீ  ஏற்றமுறச் செய்துவிட்டாய்
                           புன்னகை  மாறாமல்  புண்களைப்  பொறுத்திருந்தாய்
                           பாலைவனக்  கானலாய்  எட்டாமல்  சென்றுவிட்டாய்

                           எல்லோர்க்கும்  நல்லவளாய், எளியவளாய்  இருந்துவிட்டாய்
                           சொல்லாலும்  செயலாலும்  நீக்கமற  நிறைந்திருந்தாய்
                           பொல்லாத  காலன்  உனை  சொல்லாமல்  கொண்டு சென்றான்
                           இல்லாதவள்  ஆகிவிட்டாய்  இழந்தவர்  அழுகின்றோம்

                           அறிந்தவர்  தெரிந்தவர்  அனைவர்க்கும்  உதவிவந்தாய்
                           பிரிந்து  சென்றுவிட்டாய், இன்றெமை  மறந்துவிட்டாய்
                           இசையால்  இணைந்திருந்தோம்  இனிதாகக்  கலந்திருந்தோம்
                           ஓசையின்றி  ஓடிவிட்டாய்  விடைபெறாது  விரைந்து விட்டாய்

                           திங்கள் ஒன்றும்  தினம் பத்தும் கடந்துசெலும்  முன்புவரை
                           எங்களுடன்  நீ  இருந்தாய்  என்னுடனே  அமர்ந்திருந்தாய்
                           அளவளாவி  மகிழ்ந்திருந்தோம்  பாரதியை  ரசித்திருந்தோம்
                           உளம்மகிழ்ந்து  மனை வந்தேன்  விரைவில் உனை  இழந்துவிட்டேன்

                           என் நோவை, என் துயரை  எப்போதும்  சொல்லிவந்தேன்
                           உன்  நோவை  அறியாமல்  இலக்கியம்  பேசவந்தேன்
                           எத்தனை  உதவிகள்  எனக்கு  நீ  செய்துவிட்டாய்
                           அத்தனைக்கும்  கைம்மாறு  என்று  உஷா  நான் செய்வேன்