1. தெய்வமே அமைதிகொடு உன்னிடம் கெஞ்சுகிறேன்
செய்வதறியாது சோர்வுற்றுச் சலித்துவிட்டேன்
உய்வது எங்ஙனம் என்பதை யான் அறியேன்
பெய்வாய் உன் அருளை நம்புகிறேன் நான் சிறியேன்
2. இன்பதுன்பம் இரண்டையும் சமமாகவே நினை
என்பதனை நீ சொன்னாய் அறிவேன்-ஆதலின்
இன்னல்கள் மேன்மேலும் வந்தெனைத் தாக்கினால்
உன்னையே நினைத்திருப்பேன் என்று நீ நினைத்தாயோ
3. நான் எனது என்பதின்னும் நீங்கவில்லை
என்கணவன் என்மக்கள் என்ற எண்ணம் போகவில்லை
உணர்வுகளை உணர்ச்சிகளை எமக்கிங்கு ஏன் கொடுத்தாய்
திணறுகிறோம் அவை எமையே உணவாகக் கேட்பதனால்
4. உன் நிழல் உன்னுடன் என்று என் அன்னை சொன்னார்
முன்வினை தொடரும் என்று சொன்னார் வள்ளுவனார்
எத்தனைதான் கற்றிருந்தும் நல்லவை பல கேட்டிருந்தும்
அத்தனைக்கும் மனம் ஏன் பக்குவம் பெறவில்லை
5. அப்போதைக்கப்போதே சொல்லிவை என்றிட்டார்
எப்போதும் உன்னிடம் இடர்கள் சொல்லி அழுகின்றேன்
இத்தருணம் தெளிந்திட்டேன் உன் பரிவை உள்ளுணர்ந்தேன்
ஒத்தபடி வாழ்ந்திடுவேன் உன் நாமம் நாவில்விடுவேன்