வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

கண்மணி உஷாவுக்கு என் அன்புக்காணிக்கை



போனமுறை  இந்த  வலைத்தளத்தில் வெளியான  கட்டுரை  உருவாகும்  சமயம்  எனக்கு உறுதுணையாயிருந்த  இனிய உஷா  இன்று  தெய்வமாகிவிட்டாள்.இப்போது  வெளியாகும் இந்தக்கவிதை  அந்த  உயர்ந்த  ஆத்மாவுக்கு  ஒரு  அஞ்சலி.


                           அருமையான  உஷாவே  எளிதினில்  மறைந்துவிட்டாய்
                           ஒருமையில்  உனை  அழைப்பேன்  இளையவள் நீ, இனியவள்  நீ
                           காற்றினில்  கரைந்தாயோ, விண்ணுக்கு  விரைந்தாயோ
                           ஆற்றொணாத் துயர்  கொடுத்து  மண்ணுக்குள்  மறைந்தாயோ

                           தவமிருந்து  பெற்ற தாயைத்  தவிக்கவிட்டு  எங்குசென்றாய்
                           இவளே  எனக்கெலாம்  என்றவரை  ஏன்  பிரிந்தாய்
                           கண்மணிகள்  போன்ற  பெண்களை  ஏன் மறந்தாய்
                           எண்ணி  எண்ணி  ஏன் மனம் புண்படச் செய்துவிட்டாய்

                           காலையும் நீயே  மாலையும்  நீயே
                           உன்  பெயரின்  பொருளை  நீ  ஏற்றமுறச் செய்துவிட்டாய்
                           புன்னகை  மாறாமல்  புண்களைப்  பொறுத்திருந்தாய்
                           பாலைவனக்  கானலாய்  எட்டாமல்  சென்றுவிட்டாய்

                           எல்லோர்க்கும்  நல்லவளாய், எளியவளாய்  இருந்துவிட்டாய்
                           சொல்லாலும்  செயலாலும்  நீக்கமற  நிறைந்திருந்தாய்
                           பொல்லாத  காலன்  உனை  சொல்லாமல்  கொண்டு சென்றான்
                           இல்லாதவள்  ஆகிவிட்டாய்  இழந்தவர்  அழுகின்றோம்

                           அறிந்தவர்  தெரிந்தவர்  அனைவர்க்கும்  உதவிவந்தாய்
                           பிரிந்து  சென்றுவிட்டாய், இன்றெமை  மறந்துவிட்டாய்
                           இசையால்  இணைந்திருந்தோம்  இனிதாகக்  கலந்திருந்தோம்
                           ஓசையின்றி  ஓடிவிட்டாய்  விடைபெறாது  விரைந்து விட்டாய்

                           திங்கள் ஒன்றும்  தினம் பத்தும் கடந்துசெலும்  முன்புவரை
                           எங்களுடன்  நீ  இருந்தாய்  என்னுடனே  அமர்ந்திருந்தாய்
                           அளவளாவி  மகிழ்ந்திருந்தோம்  பாரதியை  ரசித்திருந்தோம்
                           உளம்மகிழ்ந்து  மனை வந்தேன்  விரைவில் உனை  இழந்துவிட்டேன்

                           என் நோவை, என் துயரை  எப்போதும்  சொல்லிவந்தேன்
                           உன்  நோவை  அறியாமல்  இலக்கியம்  பேசவந்தேன்
                           எத்தனை  உதவிகள்  எனக்கு  நீ  செய்துவிட்டாய்
                           அத்தனைக்கும்  கைம்மாறு  என்று  உஷா  நான் செய்வேன்