1. விட்டுச்சித்தர் அவதரித்தார் வில்லிபுத்தூரதனில்
எட்டயபுரம் பெற்றது பாவேந்தர் பாரதியை
இருவரும் பாடினர் கண்ணனைப் போற்றினர்
இறும்பூது எய்துகிறோம் தமிழராய்ப் பிறந்ததற்கே
2. பரமனுக்கு விட்டுச்சித்தர் பல்லாண்டு பாடினார்
அரங்கனின் எழில் நிலைக்க அவ்விதம் வாழ்த்தினார்
கண்ணெச்சில் விழாதிருக்கக் காப்பிட்டுக் களிப்புற்றார்
கண்ணனை சேயாக்கித் தான் அவனின் தாயானார்
3. கொஞ்சிக் கொஞ்சி அவர் வடித்த கண்ணனின் லீலைகள்
நெஞ்சினிக்க விருந்தாயின நமக்கவர் திருமொழியில்
தன்பிள்ளை அவன் என தாயாகித் தொட்டிலிட்டு
அன்பின் மிகுதியால் அரவணைத்து மகிழ்ந்திட்டார்
4. அடிமுதல் முடிவரை கண்ணனை அனுபவித்தார்
ஓடியோடிப்போகாதே முலையுண்ண வாவென்றார்
புழுதியளைந்த பொன்மேனி நீராட்டித் திளைத்திட்டார்
குழல்வாரி பூச்சூட்டிப் பாமாலை அணிவித்தார்
5. பாரதியார் கண்ணனைத் தந்தையென்றார் தாயென்றார்
சாரதியவனைத் தன் சற்குருவும் என்று சொன்னார்
தீராத விளையாட்டுப்பிள்ளை என் பிள்ளை என்றார்
ஆறுதல் சொல்லும் தோழனும் அவன் என்றார்
6. கண்ணனடிமை நான் என்றார் ஆண்டான் அவன் என்றார்
அண்ணல் அவன் அரசன் என்றார் காந்தனும் அவன் என்றார்
காதலனும் சேவகனும் சீடனும் அவன் என்றார்
ஆதலினால் அவருக்கு ஆயினன் அவன் அனைத்துமாய்
7. பெண்ணாகவும் ஆக்கினார் கண்ணனை நம் கவி
கண்ணம்மா என் குழந்தை பிள்ளைக்கனி அமுதென்றார்
'நிலவு அவள் ' என்று சொல்லி காதலியும் ஆக்கிவிட்டார்
குலதெய்வம் அவள் என்றார் அவளையே சரணடைந்தார்
8. ஒன்பதாம் நூற்றாண்டில் ஆழ்வார் அவதரித்தார் -பத்
தொன்பதாம் நூற்றாண்டில் பாரதியார் பிறந்துவந்தார்
ஒத்தகருத்தில் இவ்விருவர் 'பிள்ளைத்தமிழ் 'பாடியதை
மெத்தவே வியக்கின்றேன் மகிழ்ச்சி மிக அடைகின்றேன்