திங்கள், 20 மே, 2019

நரஸிம்மாவதாரம் - அந்தாதி

ராகமாலிகை - தாளம்:ஆதி  

 

1.சுத்ததன்யாசி :

பரமன்  எடுத்த  பத்தவதாரங்களில்

நரஸிம்மமாய்  வந்தான்  நான்காவதிலே

பரலோகத்தில்  ஒருவன்  தான் பெற்ற சாபத்தினால்

ஹிரணியன் எனும்  பெயரில்  அரக்கனாய்  வந்துதித்தான்


2.பாகேஸ்ரீ :

வந்துதித்த ஹிரணியன்  நந்தகோபன் மகனை

எந்த நாளும்  நிந்தனையே  செய்துவந்தான்

சந்ததி கருதி அவன்  சந்ததமும்  தவமிருந்தான்

வந்த மைந்தன் பிரஹலாதன்  தந்தைக்கெதிர் வாதம் செய்தான்


 3.தர்மவதி :

வாதம் செய்து வழக்காடி  நாரணனே  தெய்வமென்று

பாதகனாம்  தந்தை  உய்ய உறுதியாய்  நின்றான்

செருக்குற்ற  ஹிரணியனும்  தானே இறை என்றான்

திருமால் நாமமதை  செப்பிட தடை  விதித்தான்


4.கரஹரப்ரியா :

தடை விதித்த  தலைவன்  சொல்கேட்டு  குடியனைத்தும்

மடை திறந்தாற் போல் அவன்  நாமமதை  நவின்றிடவும்

மாதரசி மணிவயிற்றில் வந்த மகன் பிரஹலாதன்

காதலாகி  ஓம்  நமோ  நாராயணா  என்றான்

(ஓயாமல்  ஓம் நமோ நாராயணா  என்றான் )


5.ரேவதி :

என்றவன் எப்பொழுதும்  மாயனை துதித்திடவும்

ஈன்றவன்  விசனமும் பின்  சினமும்  அடைந்தான்

கன்றை ஒரு பசு  அழிக்கும் கதை கேட்டதுண்டோ

அன்றைக்கவன்  மகனை  கொல்ல  பலவிதமாய்  முயன்றான்


6.குந்தலவராளி :

முயன்றவன்  தோல்வியுற  மைந்தனும்  பிழைத்து வந்தான்

முயற்சியனைத்தையுமே  பரமன்  முறியடித்தான்

பரமன் எங்கே என்று  பிள்ளையைக்  காட்டச்சொன்னான்

வரமதால் வந்த மகன்  எங்கும் இறை உள்ளதென்றான்


7.கானடா :

எங்கும் இறை உள்ளதென்று  மகன் சொல்ல  கேட்ட மன்னன்

அங்கிருந்த ஓர் தூணினை  ஓங்கிப் பிளந்தனன்

பிளந்ததும்  நரஸிம்மமாய்  வந்த உரு  கண்டு மன்னன்

தளர்ந்து  விதிர் விதிர்த்து  நிலை குலைந்து நின்றான்


8.பிலஹரி:

நின்றவனை பாய்ந்தெடுத்து  நிலையில் அமர்ந்து  மடியிலிட்டு

பரலோகத்தில் அளித்த வரமதை நினைவில் கொண்டு

நரனும்  மிருகமுமாய்  அந்தி பகல் சேர்  சந்தியில்

கொன்று குடலுறுவி  மீட்சி அளித்தான்


9.பிருந்தாவன சாரங்கா:

மீட்சியளித்து  சாந்தமாகி  மதலைக்கு  முடி சூட்டி

ஆட்சி செய்ய  ஆசி செய்து திரும்பினான் வைகுண்டம்

காட்சிக்கினிய  அந்த நரஹரி ரூபம்

மாட்சிமை பொருந்திய  அவதாரம்

நரசிம்ம ரூபமதை  தொழுதாலே  வைபோகமே

வரமெலாம்  தந்திடுமே  அற்புத ரூபம்

வியாழன், 28 பிப்ரவரி, 2019

நான் கண்டு களித்த பாண்டுரங்கன்

                                               
                                                  

           1.               பண்டரீபுரம்      சென்றுவந்தோம்

                             பாண்டுரங்கனைப்  பார்த்துவந்தோம்

                             கண்டு கண்டு   மனம் நெகிழ்ந்தோம்

                             அண்டை அயலிடம்  சொல்லி மகிழ்ந்தோம்


            2.              பண்டொருநாள்  புண்டலீகன்  பெற்றோர்க்கு செய்த சேவை

                             கண்டு மெச்சி கண்ணன் வந்தான் அவன் இல்லம் வந்துவிட்டான்

                             தொண்டு செய்த புண்டலீகன் அங்கவனைக் காக்க வைத்தான்

                             அண்டம் காக்கும் ஆண்டவனை செங்கல் மேல் நிற்க வைத்தான்


             3.             விண்ணின்று வந்துவிட்டு  அங்கு  அவன்  காத்திருந்தான்

                             கண்ணன் அன்று தன் இடையில் கை வைத்து நின்றுவிட்டான்

                              புண்டலீகன் மனம் நெகிழ்ந்து இங்கேயே இரு என்றான்

                              வேண்டியபடி நின்றுவிட்டான் வரம்தரவே நிற்கின்றான்


              4.              பண்டரிபுரம் என்ற ஊர் பெருமைதனை  பெற்றது

                               தொண்டனிடம் மகிழ்ந்த இறையின் உறைவிடமாய் ஆனது

                               நண்பர் ஒருவர் உதவியினால் அங்கு யாம் சென்றுவந்தோம்

                               நண்பருடன் சென்று வந்தோம் புண்ணியம் செய்திட்டோம்
   

                5.             விட்டோபா என்கின்றார் விட்டலன் என்றும் நவில்கின்றார்

                                அட்டதிக்கும் நிறைந்தவனை அங்கேயே காண்கின்றார்

                                ஆடுகிறார்   பாடுகிறார்  ஆனந்தம்  அடைகின்றார்

                                ஆசையுடன் ருக்குமாயியும்  அங்கே உறைகின்றாள்