சனி, 24 செப்டம்பர், 2016

மஹாகவி பாரதிக்கு என் மனமார்ந்த அஞ்சலி

   
1. பாரதனில்  பெருமை  பெற்ற  பாரதந்தன்னில்
            
    பாரதியென்றோர்   பாவலன்   பிறந்திட்டான்

    பா  ரதத்திலேறி  பல்புகழ்  பெற்றிட்டான்

    பாரதத்தாய்  பரிதவிக்கப்  பரமனடி சேர்ந்திட்டான்


 2. 'பாட்டுக்கொரு புலவன்  பாரதி ' யென  பெயர்  பெற்றான்

     நாட்டோர்  நலனையே  நினைவினில்  கொண்டிருந்தான்

     சாட்டையடிஎனவே  சந்தமழை  பொழிந்தான்

      நாட்டினான்  நமதுரிமைதனை பாங்குறவே  பாட்டினிலே

   
 3. கண்ணனிடம்  காதல் மிகக்கொண்டு மனம்  களித்திருந்தான்

     கண்ணன்  அங்கவனுக்கு  யாவதுமாய்  நின்றிருந்தான்

     கண்ணெனவே  காத்தான் தாய்மொழிதனையும்  நாட்டினையும்

     கண்ணுக்குக்கண்ணான கவிஞனவன் இன்றிலையே

                 
4. பாப்பா பாட்டும்  குயில்பாட்டும்  பாஞ்சாலி சபதமும்

    காப்பாற்றும்  காளியின்மேல்  கவிதையும்  செய்திட்டான்

    கூப்பாடு  போட்டு  சாதி வேற்றுமையை  குழிபுதைத்தான்

    பாப்பாவும்  அவன் பெருமையினை  பள்ளியில்  பயின்றிடுமே


5. விடுதலை  விடுதலையெனவே  வீரமுழக்கம்  செய்திட்டான்

     சடுதியில்  சந்தித்தான்  சாக்காட்டினை  அவனும்

     கெடுதி  செய்தனரே  கடவுளரும்  கண்ணிலையோ

     விடுதலையினை  அவன்  விண்ணின்று  கண்டானோ

           
6. பார்த்திருந்தேன்  பாரதியை  ஞானி  அவனென  பாட்டிசொன்னர்

    சீர்திருத்தவாதியதனால்  சிந்தைதனில்  இடம் கொண்டான்

    ஏர்த்தொழிலும்  போர்த்தொழிலும்  ஏற்றமுற்றன  அவன் பாட்டில்

    பேர்பெற்ற  தமிழர்  யாம்  அவன் பெருமை  பேசுவமே

  
                
                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக