1. அன்று இவ்வுலகம் அளந்தான் பெரியவன்
இன்றிங்கு நம்மிடையே ஒளிர்ந்தார் பெரியவா
சென்றங்கு இருந்துகொண்டு ஒளிக்காட்டி வழிகாட்டி
என்றென்றும் கருணையுடன் கைபிடித்துச் செல்லட்டும்
2. காலடிஆசானின் பாதையில் சென்று அவர்
காலடிச் சுவடுகளை ஆதாரமாய்பற்றி
மாலடியைப் பற்றிவிட்டால் குறையொன்றும் இலையென்று
நாலடியில் நவின்று நமை நன்மைபெறச் செய்துவிட்டார்
3. சங்கரனும் ஐங்கரனும் ஷண்முகனும் சேர்ந்து
சங்கரனாய் இங்கெமை உய்விக்க வந்தனரோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் வந்து
தங்கமாநகர் காஞ்சியில் சிங்கமாய் அமர்ந்தாரோ
4. அன்று அந்த ஸ்வாமிநாதன் தகப்பனுக்கு குருவானார்
இன்றிந்த ஸ்வாமிநாதன் உலகுக்கே குருவானார்
பாலனாய் காஞ்சிவந்து துறவியாய் அமர்ந்தாரே
சீலனாய் நமையெல்லாம் வழிநடத்திச் செல்கிறாரே