புதன், 8 ஜனவரி, 2020

கிட்டிடுமோ வெட்டவெளி !?

1. ஆகாசம் என்றால்  வெட்டவெளி  என்கிறார்

    போகாத ஊருக்கு  வழி எங்கே என்றிடாமல்

    யோகாசனம் பயின்று  நிட்டையில் ஆழ்ந்துவிட்டால்

   நோகாமல்  மனம் சென்று  ஆகாயம்  தொடும் என்றார்


2. எட்டிஎட்டிப் பார்க்கிறேன் எட்டவில்லை அது எனக்கு

    கிட்டத்தில் அதுஇல்லை தொட்டுணர முடியவில்லை

    கிட்டமாட்டேன் என்று அது  அங்கேயே இருக்கிறது

    எட்டத்தில் இருந்துகொண்டு  எல்லையற்று விரிகிறது

                    
3. தொட்டிடுவேன் மனதால் ஆகாயத்தை என்று

    திட்டமிட்டு அமர்ந்து  தியானம் செய்ய முயல்கின்றேன்

    கட்டவிழ்ந்து ஓடும்  மனத்தைக் கட்டிவைத்து அமர்ந்திருந்தால்

    இட்டதெய்வமும் குருவும்  இயைந்துவந்து அருள்வாரோ


4. கட்டிவந்த மூட்டையை  விட்டொழிக்க ஏலாது

    கிட்டியுள்ள பிறவியிலும்  மூட்டை கட்டலாகாது

    நாட்டமெலாம் விட்டொழித்து  நல்லதையே நினைத்திருந்தால்

   ஆட்டமெல்லாம் ஓயும் முன்பு  வெட்டவெளியைத் தொடுவேனோ

4 கருத்துகள்:

  1. நாம் ஏக்கத்துடன் எட்டிப்பிடிக்க நினைக்கும் வெட்டவெளி முதலான அனைத்தையும் தன்வஸப்படுத்திய மஹா பெரியவர் ஸித்திஅடைந்த நாளன்று பிறந்துள்ள அருமையான, அழகான மனக் குழந்தை👌👌👍👍

    பதிலளிநீக்கு
  2. நன்றி வைதேஹி.👏
    இது மஹாபெரியவரின் கருணை அன்றி வேறொன்றும் இல்லை.🙏
    என்றோ எழுதிவைத்ததை இப்போது வெளியிடு என்று அவர்தான் புத்தியைக் கொடுத்திருக்கிறார் போலும்

    பதிலளிநீக்கு
  3. இன்னும் பலப்பல அழகிய மனக்குழந்தைகள் பிறந்து, நீந்தி வருவதை, ரஸிக்க ஆவலுடன்காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. அவன் அருளின்றி எதுவும் சாத்தியம் இல்லை.என்னைப் அவன் நடத்திச்செல்கிறான்.
    என் கடன் பணிசெய்து கிடப்பதே.
    கட்டளைக்குக் காத்துக்கிடக்கிறேன்🙏

    பதிலளிநீக்கு