புதன், 26 ஆகஸ்ட், 2020

வைரஸ் எனும் வைரி

                                   1.கரோனா  எனும்  பெயர்  கொண்ட  வைரி இங்கு 

                                     நரனுக்குக்    கொடுத்துவரும்   இடர்களை  நீக்கிவிட 

                                     நாரணன் வருவானா  சுதர்சனனுடனே   அல்லது 

                                     ஹரன்வந்து  நிற்பானா சூலமதை   கையில்  கொண்டு  


                                   2. ராமன்  வருவானா  வில்லும்  அம்பும்  ஏந்தி

                                      ராவணனை  அழித்தது போல்  வைரியை  அழிப்பானா 

                                      கரோனாவை  ஓடவிட்டு   உலகைவிட்டொழித்துவிட்டு 

                                       கரம்கொடுத்து  காத்துநின்று  உய்வித்துச் செல்வானா 


                                   3. சிரஞ்ஜீவி  அனுமன்  இங்கு  சீக்கிரமே  வருவானா 

                                       சஞ்ஜீவினி  கொண்டுவந்து  சங்கடம்  தீர்ப்பானா 

                                      மிஞ்சிவரும்  வைரியை வையம் விட்டு  ஒழிப்பானா 

                                      அஞ்சேலென்று  சொல்லிவந்து  தஞ்சம்  அளிப்பானா 


                                   4. ஐங்கரன்  வருவானா  இங்கெமை  காப்பானா 

                                       சங்கரன் மகன் இவன்  ஆனையாகவே  வந்து 

                                       எங்கெங்கும்  பரவிவரும்  வைரிதனை  மிதித்தழித்து 

                                       சங்கடங்கள்  தீர்த்துவைத்து  மங்கலங்கள்  கொடுப்பானா 


                                     5.கந்தசாமி  வருவானா  கைவேலுடன்   வருவானா 

                                        இந்த  மானுடம்  படும்  துயரை  துரிதமாய்  தீர்ப்பானா 

                                        வந்திருக்கும்  வைரியை  வேலெறிந்து  வெல்வானா 

                                         சொந்தங்கள்  காப்பானா  துணையாய்  இங்கிருப்பானா 


                                      6. யாதுமாகி  நின்ற  காளி  இங்குவந்து  நின்றுகொண்டு 

                                          தீது செய்யும்   வைரிதனை  நிராயுதபாணியாக்கி 

                                          ஏதும் இல்லதாகி ஓடும் விந்தைதனை  செய்வாளா 

                                           மாது அவள் நம் அன்னை  நமைகாக்க  வருவாளா 


                                      7. இறைசக்தி  பல உருவில்  வந்திருந்து சென்றதுண்டு 

                                          விரைந்து இன்று அனைத்துருவும்  ஓர் உருவாய் வந்திடுமோ 

                                           மறைந்திருந்து   வைரியை  மரித்துவிட்டுச் சென்றிடுமோ 

                                           குறையகற்றி  மனித இனம் மகிழ்ச்சியுறச் செய்திடுமோ

7 கருத்துகள்:

  1. அருமை 🙏 அவனின்றி புகல் ஏது 🙏
    இதுவும் கடந்து போகும்

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜெயஶ்ரீ
    இறை சக்திக்கு மிஞ்சியது எதுவும் இல்லை. அவனைநம்பி வாழ்வோம். நதியை கடந்தால்தான கரைசேரமுடியும். அதற்கு உதவ அவன் கருணை ஒன்றே துணை 🙏

    பதிலளிநீக்கு
  3. கொரோனாவைரியின் தாக்கத்தில் சிக்கி பரிதவிக்கும் நாம், இறையருளால் விரைவில் வைரிஅரக்கனை ஒழித்து, இந்த அசாதாரண சூழலிலிருந்து மீண்டு, இயல்பு நிலைக்குத்திரும்ப மன
    உறுதியையும், நம்பிக்கையையும் தரவல்ல அருமையான மனக்குழந்தை 👍👌🙏🙏
    உஉ

    பதிலளிநீக்கு
  4. நன்றி வைதேஹி.
    ஒன்று நிச்சயம். இந்த் குழந்தைகளைப் பெறுவது ஒன்றுதான் நான் செய்வது.அவற்றை பாலூட்டி சீராட்டி வளர்ப்பது எல்லாம் உங்களைப் போன்றவர்கள் செய்வதுதான்.ஊக்கம் கொடுத்து என்னை மகிழ்விப்பதற்கு மீண்டும் நன்றி 🙏 என்னுடைய பொறுப்பு இன்னும் அதிகமானது போல் உணர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. பூஜ்யத்துக்குள்ளே ஓரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்
    அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன். -அருமையான கண்ணதாசன்
    வரிகள்.அந்த பரம்பொருளின் திருவிளையாடலில் உருவானதே கொரோனா வைரஸ். இந்த மானுடமும் அந்த
    மகேசன் மகிமை மறந்திடலாமோ ? பக்தி நெறி பரவிடவே அவனே உன்மனக்குழந்தை
    யாய் பிறந்திட்டானோ. நிச்சயமாய் பிரிதொரு
    அவதாரம் எடுத்து ராக்ஷஸ கொரோனாவை
    அழித்து நம்மை ரக்ஷிப்பான். அவன் புகழ்தனைப் பாடுவோம் .
    "
    "கடவுளை நம்பினார் கைவிடப்படார்"
    காலத்தின் கோலம் உன் மனக்குழந்தையாய்
    உருவாகியுள்ளது .அருமையான கவிதை.
    இறையருளால் பணி தொடரட்டும்


    பதிலளிநீக்கு
  6. அருமை மன்னி. உங்களுடைய ஆழ்ந்த தெளிவான கருத்தை மிகவும் ரஸிக்கிறேன்.
    படித்து அழகாக வெளியிட்டதற்கு என் மனமார்ந்த நன்றி. 🙏

    பதிலளிநீக்கு