1.கரோனா எனும் பெயர் கொண்ட வைரி இங்கு
நரனுக்குக் கொடுத்துவரும் இடர்களை நீக்கிவிட
நாரணன் வருவானா சுதர்சனனுடனே அல்லது
ஹரன்வந்து நிற்பானா சூலமதை கையில் கொண்டு
2. ராமன் வருவானா வில்லும் அம்பும் ஏந்தி
ராவணனை அழித்தது போல் வைரியை அழிப்பானா
கரோனாவை ஓடவிட்டு உலகைவிட்டொழித்துவிட்டு
கரம்கொடுத்து காத்துநின்று உய்வித்துச் செல்வானா
3. சிரஞ்ஜீவி அனுமன் இங்கு சீக்கிரமே வருவானா
சஞ்ஜீவினி கொண்டுவந்து சங்கடம் தீர்ப்பானா
மிஞ்சிவரும் வைரியை வையம் விட்டு ஒழிப்பானா
அஞ்சேலென்று சொல்லிவந்து தஞ்சம் அளிப்பானா
4. ஐங்கரன் வருவானா இங்கெமை காப்பானா
சங்கரன் மகன் இவன் ஆனையாகவே வந்து
எங்கெங்கும் பரவிவரும் வைரிதனை மிதித்தழித்து
சங்கடங்கள் தீர்த்துவைத்து மங்கலங்கள் கொடுப்பானா
5.கந்தசாமி வருவானா கைவேலுடன் வருவானா
இந்த மானுடம் படும் துயரை துரிதமாய் தீர்ப்பானா
வந்திருக்கும் வைரியை வேலெறிந்து வெல்வானா
சொந்தங்கள் காப்பானா துணையாய் இங்கிருப்பானா
6. யாதுமாகி நின்ற காளி இங்குவந்து நின்றுகொண்டு
தீது செய்யும் வைரிதனை நிராயுதபாணியாக்கி
ஏதும் இல்லதாகி ஓடும் விந்தைதனை செய்வாளா
மாது அவள் நம் அன்னை நமைகாக்க வருவாளா
7. இறைசக்தி பல உருவில் வந்திருந்து சென்றதுண்டு
விரைந்து இன்று அனைத்துருவும் ஓர் உருவாய் வந்திடுமோ
மறைந்திருந்து வைரியை மரித்துவிட்டுச் சென்றிடுமோ
குறையகற்றி மனித இனம் மகிழ்ச்சியுறச் செய்திடுமோ